Monday, November 7, 2011

பிலாத்து சீசருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்

மாட்சிமை தங்கிய ரோமாபுரி அரசருக்கு,

வணக்கத்துடன் தெரிவிப்பது என்னவென்றால்,


கடந்த சில நட்களாக என்னுடைய மாகாணத்தில் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அறிவிக்கிறேன். இந்த நிகழ்ச்சிகள் நம்முடைய ஆளுகையை மாற்றியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், எல்லாக் கடவுள்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.

நான் Vallerius ஆட்சிக்குப்பின், யூதேயாவில் கால் எடுத்து வைத்த நாள் முதற் கொண்டு ஓய்வில்லாத மனச்சோர்வையும், துன்பத்தையும் தான் அனுபவிக்கிறேன்.

நான் எருசலேமிற்கு வந்து கவர்னர் பதவியை ஏற்றுக் கொண்ட போது, ஒரு உன்னதமான விருந்து தயார் செய்து, கலிலேயாவிலுள்ள காற்பங்கு தேசாதிபதியையும், பிரதான ஆசாரியரையும், அவருடைய அலுவலகத்திலுள்ள அதிகாரிகளையும் விரும்பி அழைத்திருந்தேன். குறித்த நேரத்தில் ஒருவரும் வரவில்லை. இதை எனக்கும், ரோமாபு



அரசாங்கத்திற்கும் இழைக்கப்பட்ட ஓர் அவமரியாதையாகவே நான் கருதுகிறேன்.

சில நாட்கள் சென்ற பின்பு, நான் பிரதான ஆசாரியரை அழைத்த போது, அவர் என்னை மதிக்காமல் வரவில்லை. அவர் வராமலிருந்தது மிகவும் மோசமான ஏமாற்றுதல் என கருதுகிறேன். அவர் தன்மார்க்க சட்டத்தை அனுசரித்து, ரோமருடன் ஒரே மேசையிலிருந்து உணவும், மதுபானமும் அருந்துவது தடைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார். இது ஒரு பொய்யான கூற்று என்று அவருடைய முகமும், விழியும் தோற்றுவித்தது.

நான் அவருடைய விளக்கத்தைத் தற்போது ஒப்புக் கொண்டாலும், ஓர் அரசாங்கத்தால் ஆளப்படுகிறவர்கள் தங்களைச் சத்துருக்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள் என்று எனக்குத் தெளிவாய்த் தெரிகிறது.

பிரதான ஆசாரியர்களைக் குறித்து ரோமாபுரியர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் பதவிகளைக் கைப்பற்றவும், ஆடம்பர ஜீவியம் நடத்தவும் தங்களுடைய சொந்தத் தாயையும் பயன்படுத்துவார்கள். நாம் கைப்பற்றியிருப்பதில் எருசலேம் நகரமானது அரசாள்வதற்கு மிகவும் கடினம். எந்த நேரத்திலும், எருசலேம் மக்கள் குழப்பம் உண்டாக்குவார்கள் என்று நான் மிகவும் திகிலடைந்திருக்கிறேன். அவர்களை அடக்குவதற்குப் போதுமான அளவு படை என்னிடம் இல்லை. தற்பொழுது என்னிடம், ஒரு நூற்றுக்கதிபதியும், நூறுபேர் கொண்ட ஒரு படையும் தான் இருக்கிறது. சிரியா தேசத்து கவர்னரிடமிருந்து, எனக்கு ஒரு படை வேண்டுமென்று விண்ணப்பித்ததற்கு, தனக்கே தற்காப்புக்குப் போதுமான படை இல்லையென்று தர மறுத்து விட்டார். மேலும், நமது ராஜ்யத்தை வழி நடத்திச் செல்ல வேண்டுமென்ற ஆசை, நமது அரசாங்கத்தையே கவிழ்த்துப் போடுமென்று நான் அஞ்சுகிறேன்.

நான் இதற்குப் பயந்து அவர்களுடன் அதிகமாய் உறவு வைத்துக் கொள்ளாமல் காலம் கடத்தி வருகிறேன். இங்குள்ள குடிமக்களின் மனநிலை எவ்விதம் இருக்கிறதென்று அறிய நான் முயற்சி செய்கிறேன்.

என் செவிகளுக்கு எட்டின அநேகக் காரியங்களில் என்னைக் கவர்ந்தது என்னவெனில், கலிலேயா நாட்டிலுள்ள ஒரு வாலிபர் தன்னை அனுப்பின கடவுளைப்பற்றி மேன்மையான உபதேசங்களைக் கூறி வருகிறார். துவக்கத்தில், அவர் குடிமக்களை ரோமராஜ்யத்திற்கு விரோதமாய் குழப்பத்திற்கு ஏதுவாய் வழி நடத்துகிறார் என்று பயந்த நான், அப்படி இல்லை என்று திட்டவட்டமாய் அறிந்து கொண்டேன்.

நாசரேத் ஊரானாகிய இயேசு, தன்னை ரோமருக்கு ஒரு நல்ல நண்பனாகவே காண்பிக்கிறார். நான் ஒரு நாள், சீலோவாம் ஊர் அருகில், ஒரு மாபெரும் கூட்டத்தின் நடுவில், ஒரு மரத்தின் மேல் சாய்ந்து நின்று, கூடி நின்றவர்களுக்கு அமைதியாய்ப் பிரசங்கம் செய்யும் ஒரு வாலிபனைக் கண்டேன். அவர்தான் இயேசு என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

நான் அங்கு கூடியிருந்து கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும், பிரசங்கிக்கிற இயேசுவையும், கண்டபோது சந்தேகப்பட்டேன்.

அவருக்கு சுமார் 30 வயதிருக்கும். இவரைப் போல் அழகும், சாந்தமும் நிறைந்த முகத்தையுடைய ஒருவரை நான் ஒருக்காலும் கண்டதில்லை. பிரசங்கிக்கிறவருக்கும், கேட்டுக்கொண்டிருக்கும் கூட்டத்தினருக்கும் உள்ள வித்தியாசம் தான் என்ன?. கூட்டத்தினர் விரும்பப்படத்தகாத ரூபமும், நீண்ட, கருத்த தாடிகளையும் உடையவர்களாய் இருந்தனர்.

கூட்டத்தைக் கலைக்க மனமில்லாமல் நான் கடந்து சென்று, என்னுடைய காரியதரிசியை அங்கு சென்று கவனமாய்க் கேட்டுவர அனுப்பி வைத்தேன். எனது காரியதரிசியின் பெயர் Manilus. Etruria என்ற இடத்தில் தங்கியிருந்த ஊயவயடiநெ என்ற குழப்பக்காரத் தலைவனுடைய பேரன் இவன். Manilus, யூதேயா தேசத்தில் நெடுங் காலமாய் வாழ்ந்து செய்து, எபிரேய மொழியைக் கற்றிருந்தான். எனக்கு அவன் மேல் பூரண நம்பிக்கையும், அபிமானமும் உண்டு.

நான் என் அலுவலகத்திற்குச் சென்றபோது Manilus- ஐக் கண்டேன். அவன் சீலோவாவிலே இயேசு பேசினவைகளைச் சொன்னான். எவ்வளவு பிரபலமான ஞானமுள்ளவனின் பேச்சுக்களையும், இந்த இயேசு பேசினவைகளுக்கு ஒப்பிட முடியாது.

மூர்க்க குணமுள்ளவர்கள் நிறைந்த எருசலேமில் உள்ள ஒரு குழப்பக்காரன், அவரிடத்தில் வந்து இராயருக்கு வரி கொடுப்பது நியாயமா?” என்று கேட்டதற்கு, இயேசு அவனுக்கு மறுமொழியாக, “இராயருக்குள்ளதை இராயருக்கும், கடவுளுக்குள்ளதை கடவுளுக்கும் கொடுங்கள்என்றார்.

இவ்வளவு கரை கடந்த ஞானம் நிறைந்தவர் ஆனதால், இந்த நசரேயனுக்கு முழு பேச்சுரிமையும் அளித்தேன். எனக்கு அவரைக் கைது செய்து தங்களிடம் அனுப்ப முழு அதிகாரமும் இருந்தது. அப்படிச் செய்வது, ரோம அரசாங்கம், நீதி தவறாத மனிதர்களை நல்லவிதமாய் நடத்திவரும் செயலுக்கு முரண்பாடாயிருக்குமல்லவா? இந்த இயேசு குழப்பம் அல்லது உபத்திரவம் உண்டாக்கவில்லை. என்னுடைய முழு பாதுகாப்பையும் அவர் அறியாமலே அவருக்கு நான் கொடுத்து வந்தேன். முழு சுதந்திரத்துடன் நடக்கவும், பேசவும், கூட்டங்களில் பிரசங்கிக்கவும், தனக்கு சீடர்களைத் தெரிந்து எடுக்கவும் அரசாங்க அனுமதி அளித்தேன். நம்முடைய முற்பிதாக்களுடைய மார்க்கம் அழிந்து போய் (அப்படி நடக்கக் கூடாது), இயேசுவின் மார்க்கம் உதித்தாலும், யூதர்கள் சொல்லுகிறது போல், கடவுள் நடத்துதல் என்றும், நாம் எண்ணுகிறபடி தலைவிதி என்றும் எண்ணிக்கொள்ள வேண்டும். இவ்வளவுக்கும் நான் தான் காரணம் என்ற எண்ணமே நிலை நிற்கும்.

இந்த அளவு கடந்த சுதந்திரத்தோடு இயேசுவை நடமாட அனுமதித்தது ஏழை யூதர்களையல்ல, ஜசுவரியவான்களாகிய அதிகாரமுள்ள யூதர்களையே கோபமூட்டினது. ஜசுவரியவான்களிடம் இயேசு கடினமான வார்த்தைகளையே பேசினார். நான் அரசாங்க நோக்கின்படி நசரேயனுக்குத் தடையுத்தரவு விதிக்கவில்லை.

இயேசு, சதுசேயர், பரிசேயரிடம் பேசினது:

விரியன் பாம்புக் குட்டிகளே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே, நீங்கள் மனிதர் முன்பாக நல்லவர்களைப் போல் நடித்து, உள்ளான இருதயத்திலே மரணத்துக் கொப்பான விசயத்தை அடக்கி வைக்கிறீர்கள்.மற்றொரு முறை, மமதை கொண்ட ஜசுவரியவான்கள் தர்மம் செய்வதை இயேசு ஏளனம் செய்தார். ஏழைகள் தங்களால் இயன்றதை தர்மம் செய்வது கடவுள் சன்னிதியில் விலையேறப் பெற்றதாயிருக்கிறது. தினந்தோறும் கிறிஸ்து இயேசு அத்துமீறி நடப்பதாக எதிரிகளிடமிருந்து அரசாங்கத்திற்குக் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருந்தன.

இயேசுவுக்கு அசம்பாவிதமான உபத்திரவம் ஏற்படக்கூடும் என்றும் எனக்கு அறிவிக்கப்பட்டது. எருசலேமிலே தீர்க்கத்தரிசிகளைக் கல்லெறிந்து கொலை செய்வது ஒரு புதிய காரியமல்ல. இராயருக்கும் மனு தாக்கல் செய்யப்படும். எப்படியிருந்தாலும், என்னுடைய நடவடிக்கைகள் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது. Parathian யுத்தம் முடிந்தவுடன் ஆவன செய்யப்படும் என்று வாக்களித்திருந்தார்கள்.

குழப்பங்களைக் கட்டுப்படுத்தும் சிரமங்களைத் தவிர்க்கவும், பட்டணத்தின் அமைதியை நிலை நிறுத்தவும், அரசாங்கம் இழிவான நிலைக்கு வராமலிருக்கவும் நான் ஒரு முறையைக் கையாண்டேன். அதாவது, அரசாங்க காரியாலயத்திற்கு வருமாறு இயேசுவுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். இயேசு வந்தார். என்னுடைய சரீரத்தில் ஸ்பானிய-ரோம இரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. நசரேயன் வந்த பொழுது நான் என் அரண்மனையில் நடந்து கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய கால்கள் பளிங்குத் தரையில் இரும்புச் சங்கிலியினால் பிணைக்கப்பட்டது போன்ற உணர்வுடன், நான் ஒரு குற்றவாளியைப் போல உணர்ந்தேன். என் ஒவ்வொரு அவயவமும் நடுங்கினது. இவ்வளவிற்கும் நசரேயன் குற்றமற்றவராய் அமைதியாயிருந்தார்.

நான் இங்கு இருக்கிறேன்”, என்று சொல்வதற்கு அடையாளமாய், அவர் என் அருகில் வந்தார். ஆனாலும் ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து எழவில்லை. நான் இந்த அதிசயமான, ஆச்சரியப்படத்தக்க இயேசுவைக் கண்டு, பயந்து ஆராய்ந்து கொண்டிருந்தேன். எண்ணற்ற சித்திரக்காரர்கள் வரைந்திருக்கும் அநேகக் கடவுள்களின் ஓவியங்களையும், வீரர்களின் ஓவியங்களையும் மனதில் ஆராய்ந்து, இந்த மகானை ஒருவரும் ஓவியமாக்கவில்லையே என்று மிகவும் நடுங்கி, அவரின் அருகில் செல்ல அஞ்சினேன். கடைசியில், தைரியத்தை வரவழைத்து, “இயேசுவே”, என்றேன். என் நாக்கு அவரின் பெயரை உச்சரிக்க இயலாமல் தடுமாறியது. நாசரேத் ஊரானாகிய இயேசுவே, கடந்த மூன்று ஆண்டுகளாய் நான் உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தேன். அதற்காக நான் சிறிதேனும் வருத்தம் அடையவில்லை. தங்களுடைய வார்த்தைகள் ஞானிகளின் வசனங்களாயிருக்கின்றன. தாங்கள் சாக்ரடீஸ் அல்லது பிளேட்டோ இவர்களுடைய சரித்திரத்தைப் படித்திருக்கிறீர்களா? அந்த எல்லா தத்துவ ஞானிகளையும் விட தங்களுடைய உரையாடலில் கெம்பீரமான சாந்தம் நிறைந்திருப்பதால், அவர்களைவிட தாங்கள் மேலான ஸ்தானத்தில் வீற்றிருக்கிறீர்கள். இதைப் பற்றி ரோமாபுரி அரசாங்கத்திற்கு அறிவித்திருக்கிறேன்.

நான் அந்த அரசாங்கத்தின் எளிய பிரதிநிதியாக இங்கிருக்கிறேன். தங்களுக்கு உரித்தான எல்லா சுதந்திரங்களையும் வழங்கினதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் தங்களுடைய பிரசங்கங்கள் சக்தியுள்ளதாய், நாளடைவில் வளர்ந்து வந்து விரோதிகளை உண்டாக்கியிருக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சாக்ரடீசுக்கு பகைவர்கள் உண்டாகி அவர்களால் அவர் மரணமடைந்தார். தங்களுக்கு அதைவிட பலமடங்கு சக்தி வாய்ந்த விரோதிகள் உண்டாயிருக்கிறார்கள். அதற்குக் காரணம் உங்களுடைய பிரசங்கங்கள். அவைகள், அவர்களுடைய குணாதிசயங்களை பகிரங்கமாய் வெளிப்படுத்தின. மேலும், தங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததினால், என் மேலும் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். நான் மறைமுகமாய்த் தங்களோடு சேர்ந்து கொண்டு எபிரேயர்களுக்குக் கொடுத்திருக்கும் அற்பமான ரோம அரசின் அதிகாரங்களையும் அபகரித்துக் கொள்வதாயும் எண்ணுகிறார்கள். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் (அரச உத்தரவு அல்ல) தாங்கள் எச்சரிக்கையாய், நிதானத்தோடு இனி பேச வேண்டும்.

ஏனெனில், தங்களுடைய சத்துருக்கள் கூடி புத்தியில்லாத ஜனங்களைக் கொண்டு, கிளர்ச்சி உண்டு பண்ணி, என்னை அரச அதிகாரத்தடன் ஏதாவது செய்யும்படி தூண்டுவார்கள் என்று சொன்னதற்கு, நசரேயனாகிய இயேசு சாந்தமாய் அளித்த பதில் என்னவெனில், “உலகத்தின் இளவரசே! தங்களுடைய வார்த்தைகள் உண்மையான ஞானத்தினால் உண்டாகவில்லை. மலைப் பள்ளத்தாக்குகளின் நடுவே கரைபுரண்டு பேரிரைச்சலோடு ஓடிவரும் பெரு வெள்ளத்தை நில் என்று சொன்னால் என்ன நடக்கும்? – பள்ளத்தாக்கிலுள்ள எல்லா மரங்களையும் வேரோடு பெயர்த்துக் கொண்டு போய்விடும் அல்லவா? பெருவெள்ளம் என்ன சொல்லும் தெரியுமா? நான் என்னை சிருஷ்டித்தவருக்கும், இயற்கை விதிகளுக்கும் தான் கீழ்ப்படிவேன். கடவுளுக்கு மாத்திரம் தான் பெருவெள்ளம் எங்கே ஓடுகிறதென்று தெரியும். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், “சாரோனின் ரோஜா மலருமுன் குற்றமற்றவரின் உதிரம் பூமியில் சிந்தப்படும்”, என்றார்.

நான் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு, வேகத்தோடு, “உங்களுடைய உதிரம் சிந்தப்பட மாட்டாது”, என்று சொன்னேன். என் மனதில், தங்களின் ஞானத்தை சீர்தூக்கிப் பார்க்கையில், குழப்பக்காரரும், பெருமைக்காரரும், ரோம அரசால் அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை அவமதிக்கிறவருமாகிய பரிசேயரைப் பார்க்கிலும் தாங்கள் எவ்வளவோ மேலானவர். அவர்கள், இராயருக்கு விரோதமாய் இரகசியக் கூட்டம் போட்டும், கல்வியறிவு இல்லாத மக்களிடம், “இராயர் ஒரு கொடுங்கோல் மன்னன்,” என்று போதித்தும், தங்களுக்கு அழிவைத் தேடுகிறார்கள். அகம்பாவம் நிறைந்த பிச்சைக்காரர்கள்! ஸைபீரியா தேசத்து ஓநாய்கள்! சில சமயங்களில் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு கொடூரமானச் செயல்களைச் செய்ய முயற்சிக்கிறார்கள். நான் தங்களுக்கு அவர்களிடமிருந்து பாதுகாப்பு அளிப்பேன். என்னுடைய அரசாங்கம் தங்களுக்கு, இரவும் பகலும் ஒரு அடைக்கலப் பட்டணமாயிருக்கும்,” என்றேன்.

இயேசுவோ, சாதாரணமாய்த் தலையை அசைத்து, தெய்வீகப் புன்னகையுடன் சொன்னதாவது, “பூமியிலும், அதன் தாழ்விடம் வரையிலும், மனுசக் குமாரனுக்கு பாதுகாப்பு கிடைக்காத நாட்கள் வரப் போகிறது. வானாதி வானங்களை அவர் சுட்டிக்காட்டி, “நீதிமான்களுக்கு அடைக்கலம் அங்கே இருக்கிறது: தீர்க்கத்தரிசிகளின் புத்தகங்களில் எழுதியிருப்பவை நிறைவேற வேண்டியது அவசியம்,” என்று சொன்னார்.

நான் அவரை, “வாலிபனே,” என்று அழைத்து, “தயவு செய்து என்னுடைய வேண்டுகோளை அரசாங்க உத்தரவாக ஏற்றுக் கொள்வாயாக. இந்த இராஜ்யத்தில் சமாதானத்தை நிறுவும் உத்தரவாதம் என் பொறுப்பில் உள்ளது. உங்களுடைய பேச்சைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கிறவராய் இருக்க வேண்டும். என்னுடைய உத்தரவை மீறி நடக்காதிருங்கள். மீறினால் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமே? என்னுடைய சந்தோசம் உங்களோடு இருப்பதாக போய் வாருங்கள்,” என்றேன்.

அதற்கு அவர், “உலகத்தின் இளவரசே, நான் உலகத்தில் யுத்தம் நடத்த வராமல், சமாதானம், அன்பு, மனுசர் மேல் பிரியம், இவைகளையே கொண்டு வந்திருக்கிறேன். Augustus Ceasar, பிறந்த அதே நாளில் நானும் பிறந்தேன். Augustus, ரோம ராஜ்யத்திற்கு சமாதானம் அளிக்கிறார். உபத்திரவங்கள் என்னிடத்திலிருந்து புறப்படாது. மற்றவர்களிடமிருந்து அவைகளை நான் எதிர்பார்க்கிறேன். நான் அவைகளை, என் பிதாவிற்குக் கீழ்ப்படிந்து. அவர் சித்தப்படி ஏற்றுக் கொள்வேன். அவர் எனக்கு வழிகாட்டியாயிருக்கிறார். உங்கள் உலக ஞானத்தைக் கொஞ்சம் அடக்கிக் கொள்ளுங்கள். மரண வாசலில் இருக்கும் ஒரு கைதியைக் கைது செய்ய உங்களுக்கு அதிகாரம் கிடையாது,” என்று சொல்லிக் கொண்டே, பிரகாசமான நிழல் போல் அரண்மனையின் திரைச்சீலையின் பின்னால் மறைந்து போனார். அவர் முன்னிலையில் நான் என்னை விடுவித்துக் கொள்ள முடியாத பிரமாண்டமான பாரத்திலிருந்து, விடுதலை பெற்றேன்.

அந்நாட்களில், கலிலேயா நாட்டை ஆட்சி புரிந்த ஏரோதுவிடம், இயேசுவின் விரோதிகள், அவரைப் பழி வாங்கும் நோக்கத்துடன் முறையிட்டார்கள். ஏரோது தன் சொந்த விருப்பத்தின்படி செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தால் இயேசுவைக் கொலை செய்ய அனுமதித்திருக்கலாம். ஆனால், ஒருவேளை, தன்னுடைய உயர் பதவியின் நிமித்தமோ, அல்லது பாராளுமன்றம் இச்செயலை விரும்புமோ? அல்லது என்னைப் போல் இயேசுவுக்குப் பயந்துதான் இயேசுவைக் கொலை செய்ய அனுமதியாமலிருந்தாரோ தெரியவில்லை. ஒரு ரோம அதிகாரி யூதர்களோடு ஐக்கியமாய் இருக்கக் கூடாது. முன்பு ஒருமுறை, ஏரோது என் அரண்மனைக்கு வந்திருந்த பொழுது, பல காரியங்களைப் பற்றி பேசிய பின்பு, இந்த நசரேயனைக் குறித்து என் அபிப்பிராயம் என்னவென்று கேட்டார்.

நான் சொன்னதாவது, “இயேசு, என் பார்வையில், பெரிய தத்துவ ஞானிகளில் ஒருவர். அவருடைய பிரசங்கங்கள் குழப்பம் உண்டாக்கக் கூடியவைகள் அல்ல என்றும், ரோம அரசாங்கம், அவர் பேசுகிறதற்கு ஒரு தடையும் விதிக்கத் தேவையில்லை என்றும் சொன்னேன்.எனக்கு சந்தோசமாய் வந்தனம் செய்து விட்டுச் சென்றார்.

யூதருடைய விசேஷமான பஸ்கா பண்டிகை நெருங்கி வருகிற படியால், எப்பொழுதும் போல், அதைக் கொண்டாட ஆவலாய்க் காத்து இருந்தார்கள். பட்டணம் பெரியக் கூட்டத்துடன் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. நசரேயனைத் தீர்த்துக்கட்டி விட வேண்டுமென்று சிலர் துடித்துக் கொண்டிருந்தனர்;. அவர்கள் ஆலயத்திலுள்ள பொக்கிசத்தைச் செலவு செய்து திரளான ஜனங்களைக் கூட்டிச் சேர்க்கிறதாக, என்னுடைய ஆட்கள் சொன்னார்கள். அபாயங்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தன. ஒரு ரோம நூற்றுக்கதிபதி அவமானப் படுத்தப்பட்டான். நான் சிரியா தேசத்து அதிகாரியை எனக்கு உதவி செய்ய, நூறு பேர்கொண்ட ஒரு படையும், குதிரைப் படையும் வேண்டுமென்று எழுதியிருந்தேன். அவர் மறுத்து விட்டார். நான் தன்னந் தனியாக, மிகவும் சொற்பமான ஆட்களைக் கொண்ட படையை வைத்து, குழப்பம் நிறைந்த ஒரு பட்டணத்தை அடக்கத் திராணியற்றவனாய்த் திகைத்துக் கொண்டிருந்தேன். வேறு என்ன செய்ய என்னால் இயலும்?.

அவர்கள் இயேசுவைப் பிடித்து, அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று கூச்சலிட்டார்கள். அவர்களுக்கு என் பெயரில் நம்பிக்கை கிடையாது. மூன்று பெரிய சதிக் கூட்டங்கள் இயேசுவுக்கு எதிராக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன.

முதலாவதாக, சதுசேயரும், ஏரோதியர்களும் இரட்டை நோக்கத்துடன் வேலை செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் நசரேயனை மனமார வெறுத்து, ரோம அரசாங்கத்தை அதம் பண்ண இருந்தார்கள். நான் ரோம ராஜ்யத்து மன்னருடைய சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளை ஏந்திக் கொண்டு, பட்டணத்திற்குள் பிரவேசித்ததை, பெரிய குற்றமாக எண்ணியிருந்தார்கள். ஆனாலும், அவர்கள் ஆலயத்தின் பொக்கிசத்திலிருந்து பணத்தை எடுத்து வீணாயச் செலவு செய்தது எவ்வளவு பெரிய குற்றம் என்று எண்ணவில்லை. மற்றொரு சம்பவம் என்னவென்றால், நான் ஆலய பொக்கிசத்திலிருந்து பணம் எடுத்து பொது மக்களுடைய அவசரத் தேவைக்காகச் செலவு செய்ய வேண்டும் என்றதை மறுத்து விட்டார்கள். இதுவும் அவர்கள் மனதில் குற்றமாய்க் குடி கொண்டிருந்தது.

பரிசேயர்கள் இயேசுவின் பயங்கர விரோதிகள். அவர்களுக்கு அரசாங்கத்தைப் பற்றிய அக்கறையே கிடையாது. நசரேயனாகிய இயேசு, மூன்று வருட காலமாய், அவர்கள் பயங்கரமாய்ச் செய்து வந்த தப்பிதங்களையெல்லாம் அவர் போன இடங்களிலெல்லாம் கண்டித்துக் கொண்டே வந்தார். இதை அவர்கள், மனதில் பழிவாங்கும் நோக்கத்துடன் ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

தனித்து நின்று செயல்பட கோழைத்தனமாயிருந்தபடியால் அவர்கள் சதுசேயரையும், ஏரோதியரையும் தங்களோடு சேர்த்துக் கொண்டார்கள். மேலும் ஜனக்கூட்டம், சதி ஆலோசனைகளின்படி குழப்பங்கள் உண்டு பண்ணியதால், தங்களுக்கு ஆதாயம் தரும் வழிகளை உண்டாக்கிக் கொண்டார்கள்.

இயேசு பிரதான ஆசாரியன் முன்பாக இழுத்துச் செல்லப்பட்டு, சிலுவையில் மரண தண்டனை விதிக்கப் பெற்றார்;. பின்பு, பிரதான ஆசாரியன், காய்பாவிடம் இயேசுவை அனுப்பி வைத்தான். அவன் தன்னுடையக் கைதியை என்னிடம் அனுப்பி, அவர்கள் எடுத்த முடிவு சரியானது என்று ஊர்ஜிதப் படுத்தப் பிரயாசப் பட்டான்.

இயேசு ஒரு கலிலேயன் ஆனபடியால், ஏரோதின் ஆட்சிக்குட்பட்டவர் என்று கூறி அவரை இங்கு அனுப்பினான். தன்னைவிட்டு வேறு எங்காவது போய்த் தொலையட்டும் என்ற நோக்கத்தோடு அவரை இங்கு அனுப்பி வைத்தான். ஜனங்கள் அலை அலையாய் வந்து கூடி விட்டார்கள். யூதேயா நாட்டு ஜனங்கள் யாவரும் திரளாய் வந்து விட்டார்கள். எருசலேம் நகர மலைச்சரிவில் இருந்து பட்டணம் முழுவதும் ஜனசமுத்திரம் நிறைந்து வழிந்தது.

நான் கால் (Gaul) தேசத்திலிருந்து ஒரு பெண்ணை மணம் புரிந்திருந்தேன். அவள் பின்னால் நடக்கப் போகும் காரியங்களை முன்கூட்டியே அறிவிக்கும் சக்தி தனக்கு இருப்பது போல் பாவிப்பாள். அவள், அழுது புலம்பி, என் கால்மாட்டில் வீழ்ந்து, அந்த பரிசுத்தமான மனிதனுக்கு யாதொரு தீங்கும் செய்யக் கூடாது என்று என்னைக் கண்டிப்பாய் எச்சரித்தாள். நேற்று இரவு நான் அவரை ஒரு தரிசனத்தில் கண்டேன். தண்ணீரின் மேல் நடந்து கொண்டிருந்தார். காற்றை செட்டைகளாய் பாவித்து மேகங்களின் மேல் பறந்து சென்றார். அவர் புயல் காற்றுடனும், நீரில் வாழும் மீன்களுடனும் சம்பாஷித்தார். எல்லாம் அவருக்குக் கீழ்ப்படிந்தன. பாருங்கள், கெதரோன் மலையிலிருந்து உதிரம் வெள்ளம் போல் புரண்டு வருகிறது. ராயருடைய சிலை முழுவதும் Genocide--ஆல் நிறைகிறது. அரண்மனையின் தூண்களில் வெடிப்பு ஏற்படுகிறது. சூரியனோ, தன்னை முக்காடு போட்டு மூடிக் கொண்டு, கல்லறையினுள் புலம்பிக் கொண்டிருக்கிறது. ஜயோ! பிலாத்துவே, துன்பங்கள் உன் வாசலண்டையில் காத்துக் கிடக்கிறது. தங்களுடைய மனைவியின் ஆணைக்குச் செவிமடுக்காவிடில், ஒரு ரோம அதிகாரிக்கு நேரிடும் சாபங்களுக்கு ஆளாவீர். சீசருடைய கோபத்திற்கும் உட்படுவீர் என்றாள்.

இந்தத் தருணத்தில், பளிங்கு ஏணிப்படிகள் கூட்டத்தின் பாரச்சுமை தாங்க முடியாமல் முனங்கிற்று. நசரேயன் என்னிடத்தில் கொண்டு வரப்பட்டார். நான் நீதிமண்டபத்திற்கு என்னுடைய காவலருடன் சென்று, அதிகாரத்தோடு, அவர்களிடம், “என்ன வேண்டும்,?” என்று கேட்டேன்.

நசரேயனைக் கொல்ல வேண்டும்”, என்றார்கள்.

என்ன குற்றத்திற்காக?”.

அவன் தேவதூஷணம் சொன்னான். தேவாலயத்தைப் பற்றி தீர்க்கத் தரிசனம் சொன்னான். தன்னை தேவகுமாரன் என்றும், மேசியாவும், யூதருடைய ராஜாவும் நான் தான் என்றும் சொன்னான்”.

ரோம அரசாங்கம் இந்த மாதிரி குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்காது”, என்றேன்.

சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்”, என்று குழம்பி நின்ற கூட்டத்தினர் கூக்குரலிட்டார்கள்.

கோபாவேசத்தோடு நின்ற ஜனசமுத்திரம் போட்ட கூக்குரலில் அரண்மனையின் அஸ்திபாரமே அதிர்ந்து கொடுத்தது.

இந்த பயங்கர கூட்டத்தின் நடுவில், ஒரே ஒரு ஜென்மம் மாத்திரம் சாந்தமாய், சமாதானத்தோடு நின்று கொண்டிருந்தது! அது நசரேயனாகிய இயேசுவே.!!

எத்தனையோ வழிகளில் நசரேயனைக் காப்பாற்ற நான் முயற்சி செய்தும் தோல்வியுற்றேன். கடைசியில் ஒரே ஒரு வழி மட்டும் எனக்குப் புலப்பட்டது. அதைக் கொண்டு அவருடைய உயிரைக் காப்பாற்றலாம் என்று அவர்களிடம் அந்த வழியைக் கூறினேன்.

யூதர்களின் பஸ்கா பண்டிகை தோறும் ஒரு கைதியை விடுதலை செய்வது வழக்கம். ஆகையால், இயேசு என்ற அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியை விடுதலை செய்யலாமா?, என்றேன். ஆனால் ஜனங்களோ, “இயேசு சிலுவையில் அறையப்பட வேண்டும்”, என்றார்கள்.

நான் திரும்பவும் அவர்களுடன் பேசினேன்.

நீங்கள் சொல்வது சரியல்ல, சட்ட விரோதமானது. எந்தக் குற்றவாளியும் ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்த பின்பு தான் நியாயாதிபதி தண்டனை விதிக்க வேண்டும். தண்டனையும் சனகரீம் சங்கத்தின் அனுமதி பெற்றதற்கு அடையாளமாக தலைவரின் கைச்சாத்தும் உடையதாயிருக்க வேண்டும். தண்டனையை விதித்த அன்றே அதனை நிறைவேற்றக் கூடாது. மறுநாளும், சனகரீம் சங்கம் திரும்பவும் முழு நடவடிக்கைகளையும் ஆராய வேண்டும். இதுதான் அவர்கள் சட்டம். மேலும், நியாயஸ்தலத்தின் வாசலில் ஒருவன் கொடி பிடித்து நிற்க வேண்டும். மற்றொருவன் சற்று அப்பால் குதிரை மேல் இருந்து கொண்டு, குற்றவாளியின் பெயரையும், அவன் செய்த குற்றத்தையும் எல்லாருக்கும் கேட்கும் படியாய் உரத்த சத்தமிட்டுச் சொல்ல வேண்டும். சாட்சிகளின் பெயரையும் கூறவேண்டும். அதில் யாராவது குற்றவாளிக்குச் சாதகமாகச் சாட்சி சொல்லுகிறார்களா என்று கவனிக்க வேண்டும். குற்றவாளியும் மூன்று தடவை திரும்பி ஏதாவது கேட்க வேண்டுமானால் கேட்கலாம்.

இந்த எல்லா முறைகளையும் கூறி நான் பிரயாசப்பட்டும் அவர்கள் அவரை, “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்”, என்று கூக்குரலிட்டார்கள். முடிவாக, வேறுவழியின்றி, இயேசுவை நான் வாரினால் அடிப்பதற்கு உத்தரவிட்டேன். ஒருவேளை அவர்கள் திருப்தியடைவார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் இது அவர்களுடைய கோபத்தைத்தான் அதிகப்படுத்தியது. அடுத்தாற் போல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, “நான் என்னுடைய விசாரணையில் மரணத்துக்கேதுவான ஒரு குற்றமும் இயேசு செய்யவில்லை”, என்று சொல்லி, ஜனக்கூட்டத்தின் முன்பாக என் கைகளைக் கழுவினேன். ஒரு பிரயோஜனமும் இல்லை.

இந்த அக்கிரமக்காரர் அவருடைய ஜீவனின் மேல் தாகம் கொண்டிருந்தார்கள். என்னுடைய அனேக சிவில் விவகாரங்களில் கோபம் அடைபவர்கள் உண்டு, ஆனாலும் இந்தக் கூட்டத்தைப் போல் நான் என் ஆயுள் நாட்களில் ஒரு கூட்டத்தையும் கண்டதில்லை. உண்மையைக் கூறினால், எல்லாப் பாகங்களிலிருந்தும் ஜனங்கள் எருசலேமில் கூடி இருந்தார்கள்.

ஜனத்திரள் நடந்த மாதிரி தெரியவில்லை. ஆனால், சுழற்காற்று மனித அலைகளை உருட்டிக் கொண்டு, நீதி மன்றத்திலிருந்து சீயோன் மலை மட்டும் கொண்டு போனது போலிருந்தது. கூட்டமோ, கூச்சலிட்டுக் கொண்டும், அலறிக் கொண்டும், ஊளையிட்டுக் கொண்டும் போனதைப் போல் நான் ஒரு இடத்திலும், ஒரு சந்தர்ப்பத்திலும் கேள்விப் பட்டதேயில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக, மழைக் காலத்து மாலை நேரம் போல, பகல் இருளாகிக் கொண்டிருந்தது. மகத்தான ஜீலியஸ் சீசர் மரணத்தோடு நடந்தது போல் இருந்தது. மார்ச் மாத Ides போல இருந்தது. நானோ மாகாண கவர்னராக, ஒரு குழப்பம் நிறைந்த நிலையில், அரண்மனைத் தூணில் சாய்ந்து கொண்டு, வெறி கொண்ட ஜனத்திரள், ஒருபாவமும் இல்லாத பரிசுத்தனாகிய நசரேயனை, கொலைக் களத்திற்கு இழுத்துக் கொண்டுப் போவதைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.

என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாரும் போய் விட்டார்கள். எருசலேம் பட்டணத்தில் வாசம் செய்தவர்களை மரண ஊர்வலம் சிதறடித்திருந்தது. ஒரு வெறுமையும், மனவருத்தமும் என்னை மூடிக் கொண்டது. என்னுடைய காவலர்கள் குதிரைப்படையில் சேர்ந்து கொண்டனர். நூற்றுக்கதிபதியோ அதிகாரத்தோடு ஒழுங்கைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். நான் தனியாய் விடப்பட்டேன். என்னுடைய நொறுங்குண்ட இருதயம், அந்த நேரத்தில் நடந்த சம்பவங்களைக் குறித்து ஆழ்ந்த சிந்தனையுடன் ஆராய்ந்து, இது கடவுளுடைய சரித்திரத்தைக் குறிப்பதேயல்லாமல் மனிதர்களைப் பற்றியதல்ல என்று தீர்மானித்தது. கொல்கதா மலை மேட்டிலிருந்து காற்று மூலமாய் வந்த ஓசையுடன் கூடிய சத்தம், ஒருநாளும் கேள்விப் பட்டிராததும், பிராண வேதனையுடையதுமாயிருந்தது. கார்மேகம் ஆலயத்தின் கோபுரத்திலும், எருசலேம் பட்டணத்தின் மேலும் இறங்கி இருட்டடித்தது. மிகவும் பயங்கரமான அடையாளங்கள் பூமியிலும், வானத்திலும் காணப்பட்டன. Dionysius-ம், Areopagite-ம், இந்த அடையாளங்களைக் கண்டு விட்டு, ஒன்று சிருஷ்டி கர்த்தா துன்பப்பட வேண்டும், அல்லது பூலோகமே சின்னா பின்னமாகிக் கொண்டிருக்க வேண்டும் என்றார்களாம்.

இந்த பயங்கரமான சம்பவங்கள் இயற்கையில் நேர்ந்து கொண்டிருக்கும் போது, எகிப்து தேசத்தின் கீழ்ப்பாகத்தில் மிகவும் பயங்கரமான பூமியதிர்ச்சி உண்டாகி எல்லா ஜனங்களையும் மரண பயத்திற்குள் ஆழ்த்தியதோடல்லாமல், மூடநம்பிக்கையில்லா யூதர்களையும் மரண வேதனையடையச் செய்தது. அந்திரேயாவிலுள்ள ஒரு வயோதிக ஞானமுள்ள Belthasar எனும் யூதன், அதே நேரத்தில் அதிர்ச்சியடைந்து மரித்துப் போனார். அவர் பயத்தால் மரித்தாரோ, அல்லது துக்க மேலீட்டால் மரித்தாரோ என்று திட்டவட்டமாய்ப் புலப்படவில்லை. ஆனால் அவர் நசரேயனுடைய நெருங்கிய அந்தரங்க நண்பராயிருந்தார்.

இரவின் முன் நேரத்தில், நான் சால்வையை எடுத்து, என்னை மூடிக் கொண்டு பட்டணத்தின் வழியாகக் கொல்கதா மேட்டு மலையின் பிரதான வாசலுக்கு நேராக நடந்து சென்றேன். அந்த நேரத்தில், பலியின் நடவடிக்கைகள் எல்லாம் முடிவடைந்திருந்தன. கூட்டம் கலைந்து, அவரவர்கள் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். என்றாலும் உண்மையாக அவர்கள், திகிலடைந்தவர்களாகவும், கிலேசமடைந்தவர்களாகவும், ஆபத்துக்களை எதிர்நோக்கினவர்களாகவும், மௌனமாயிருந்தனர். அவர்கள் தங்கள் கண்களால் கண்ட சம்பவங்களே, அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருந்தது. மேலும, எனது சிறிய ரோமப்படை கழுகின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை மூடி மறைத்துக் கொண்டு துயரம் தாங்கொண்ணாமல் புலம்பிக் கொண்டு போனது. சில யூதப் படையிலுள்ளவர்கள் நான் அறியாத பாசையில் என்னவெல்லாமோ உளறிக் கொண்டே போனார்கள்.
மற்றவர்கள், ரோமாபுரியார்களை, இயேசு அற்புதங்களினால் மடங்கடித்த செயல்களை மறுபடியும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர். சில சமயங்களில், மனிதர்கள் சிறு குழுக்களாய் நின்று விடுவார்கள். கல்வாரி மலை மேட்டைத் திரும்பிப் பார்ப்பார்கள். அசைவற்று மரம் போல் நின்று ஏதாவது அதிசய சம்பவம் நேரிடும் என்று எண்ணினார்கள்.

நான் துக்கமும், சஞ்சலமும் நிறைந்தவனாய் அரண்மனைக்குத் திரும்பினேன். நசரேயனுடைய இரத்தம் சிந்தப்பட்டிருந்த மாடிப்படிகளின் வழியாய் வரும் பொழுது ஒரு வயது சென்ற மனிதன், பரிதாபமாய்க் கெஞ்சும் பாவனையில் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பின்னால் அநேக ரோமாபுரியார்கள், மாலை மாலையாய்க் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர். அவன் என் கால்மாட்டில் வீழ்ந்து கதறி அழுதான்.

அந்த வயோதிபன் அழுவதைக் கண்டதும், நான் முன்பே துக்கம் நிறைந்தவனாய் இருந்தபடியால், நானும் சேர்ந்து அழுதேன். அந்த வயோதிபனை ஒருக்காலும் நான் கண்டதில்லை. உண்மையாய்ச் சொல்லப் போனால், நான் கண்ட அநேகரின் கண்களில், தொடர்ந்து அவர்கள் அழுததால், கண்ணீரே இல்லாதிருந்தது.

நான் என் ஆயுளில் இப்படி அளவு கடந்த விரோதத்துடன் யாரும் நடந்து கொண்டதைக் காணவில்லை. அவரைக் காட்டிக் கொடுத்தவரும், விலைபேசி விற்றவரும், அவருக்கு எதிராய்ப் பொய்சாட்சி சொன்னவரும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டவர்களும், அவன் இரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் இருக்கட்டும் என்றவர்களும், கோழைகளைப் போல அடங்கி, தங்கள் பற்களைக் காடியால் கழுவினார்கள். இயேசு கிறிஸ்து, உயிர்த்தெழுதலும், மரணத்துக்குப் பின் நல்லவர்களும், கெட்டவர்களும் தனித்தனியாய் பிரிக்கப்படுவார்கள் என்று முன்பே போதித்ததாகக் கேள்விப்பட்டேன். அப்படியானால், அது இந்த பெரிய ஜனக் கூட்டத்திலேயே ஆரம்பமாயிற்று என்று நான் திட்டவட்டமாய் நம்புகிறேன்.

அந்த வயோதிபனை நோக்கி, “தகப்பனே, நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?”, என்று என் மனவருத்தத்தை உள்ளடக்கிக் கொண்டு விசாரித்தேன். அவர் முழங்காலில் நின்று கொண்டு மிகவும் பணிவன்புடன், “நான் அரிமத்தியா ஊரானான யோசேப்பு. நான் நசரேயனாகிய இயேசுவை நல் அடக்கம் செய்ய தங்களிடம் அனுமதி கோரி நிற்கிறேன்என்றார்.

உங்களுடைய விண்ணப்பத்திற்குச் செவிமடுத்தேன்”, என்று சொல்லி, அதே நேரத்தில் Manilus ஜ சில படைவீரர்களுடன் அனுப்பி, இயேசுவை நல் அடக்கம் செய்யும்படி ஏற்பாடு செய்தேன்.

சில நாட்கள் சென்ற பின், இயேசுவினுடைய கல்லறை வெறுமையாயிருந்தது. அவருடைய சீஷர்கள், இயேசு தாம் முன் அறிவித்தபடியே உயிர்த்தெழுந்தார் என்று தேசம் முழுவதும் பறைசாற்றினார்கள். சிலுவையில் அறைந்த சம்பவத்தை விட உயிர்த்தெழுதல் அதிகக் கிளர்ச்சியை உண்டாக்கி விட்டது. நான் இதை உண்மையாய்ச் சொல்ல முடியாது. என்றாலும், நான் தீர விசாரித்தேன். நீங்களும் ஆராய்ந்து பார்த்து, நான் தப்பிதமாய்ச் சொல்லிவிட்டேனோ என்று ஏரோது சொன்னதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு இயேசுவின் சடலத்தை தனக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருந்த கல்லறையில் நல் அடக்கம் செய்தான். இயேசுவின் உயிர்த்தெழுதலை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கல்லறையைக் கட்டியிருந்தானோ? அல்லது, வேறு ஒரு கல்லறையைக் கட்ட நினைத்திருந்தானோ? எனக்குச் சொல்ல முடியவில்லை.

அடக்கம் செய்யப்பட்ட மறுநாள், ஒரு ஆசாரியன் என்னிடத்தில் வந்து, இயேசுவின் சரீரத்தை சீஷர்கள் திருடிக் கொண்டு போய் விட்டு, அவர் முன்பே அறிவித்தபடி, மரித்தோரிலிருந்து அவர் உயிர்த்தெழுந்தார் என்று பொய் சொல்லுவார்கள் என்று நாங்கள் நிச்சயமாய் நம்புகிறோம் என்றான். நான் உடனே அவனை Malcus- என்ற ரோமாபுரி அரசாங்க சேனைத் தலைவனிடம் அனுப்பி, எத்தனை யூதப் போர்வீரர்கள் தேவைப்படுமோ, அத்தனை வீரர்களைக் கொண்டு காவல் புரியும்படி ஏற்பாடு செய்தேன். அவர்கள் நினைத்தது போல் ஏதாவது நடந்து விட்டால், ரோம ராஜ்யத்தைக் குறை கூற முடியாமற் போகுமல்லவா?

கல்லறை வெறுமையாக்கப் பட்டதைக் குறித்து பிரமிப்பு உண்டான உடனே, நானும் மிகவும் பயந்து, ஏதாவது சம்பவிக்குமோ என்று அஞ்சினேன்.

என்னிடத்தில் வந்து உயிர்த்தெழுதலைப் பற்றிச் சொன்ன Islam-ஐ வரவழைத்தேன். அவன் முழு விவரமும் சொன்னான். அவர்கள், ஓர் அழகான மெல்லிய வெளிச்சம் கல்லறையின் மேல் பிரகாசிக்கக் கண்டார்களாம். உடனே இயேசுவுக்குச் சொந்தமான பெண்கள் யாராவது யூதர் வழக்கப்படி சடலத்திற்குக் கந்தவர்க்கம் பூச வந்திருப்பார்கள் என்று நினைத்ததுமில்லாமல், அவர்கள் எப்படி இவ்வளவு காவலர்களையும் கடந்து கல்லறையண்டை வந்தார்கள் என்றும் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுதே, அந்தப் பிரதேசம் முழுவதும் பிரகாசமான ஒளியில் மூழ்கியதோடல்லாமல், கூட்டம் கூட்டமாய், மரித்தோர்கள் தங்கள் கல்லறைத் துணிகளுடன் அங்கு எழும்பி நிற்பதையும் கண்டு அதிசயித்தானாம். அந்தக் கூட்டத்தினர் யாவரும் ஏகோபித்து முழங்கின சப்தம் அந்தப் பிரதேசத்தையே நிரப்பிவிட்டது. அவன் ஒரு நாளும் கேட்டு அனுபவித்திராத இனிய நாதமுள்ள சங்கீதம், பூமியிலும், ஆகாயத்திலும் கடவுளைத் துதித்துப் பாடிக் கொண்டே இருந்தது. அதே வேளையில், பூமியானது மனக் கலக்கத்தையும், வேதனையையும் உண்டாக்கத் தக்கதாக சுழன்று கொண்டிருந்தபடியால், என் கால்களைத் தரையில் ஊன்றி நிற்க முடியவில்லை. என் மூளையும் குழம்பி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் போய் விட்டது என்றான்.

உனக்குப் புத்தி தெளிந்த பிறகு நீ என்ன நிலையிலிருந்தாய்”, என்று கேட்டதற்கு, “நான் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்தேன்”, என்றான். ஒருவேளை நீ திடீரென்று தூக்கத்திலிருந்து விழிப்படைந்ததினால் உண்டான மயக்கமாயிருக்கலாம்”, என்றதற்கு, “நான் ஒருநாளும் வேலை நேரத்தில் உறங்க மாட்டேன், அப்படிச் செய்தால், மரண தண்டனை விதிக்கப்படும் என்று எனக்குத் தெரியும்”, என்றான். நானும் உறங்கினேன், மற்ற போர்ச் சேவகர்களும் உறங்கினார்கள்”;. “எவ்வளவு நேரம் நீடித்திருந்தது?”, என்று நான் கேட்டதற்கு, “எனக்குத் தெரியாது, ஒருவேளை ஒரு மணி நேரமாயிருக்கலாம்”, என்றான். சரி, இதற்குப் பிறகு, நீ இயேசுவின் கல்லறைக்குப் போனாயா?”, என்று கேட்டதற்கு, “நான் போகவே இல்லை... எனக்கு மிகவும் பயமாக இருந்தது”, என்றான்.

உன்னிடத்தில் ஆசாரியர்கள் கேள்விகள் கேட்டார்களா?”, என்றதற்கு, “ஆம், கேட்டார்கள். நான் தூங்கி விட்டேன், பூமி அதிர்ச்சி வந்தது என்று சொல்லும் படியாகவும், இயேசுவின் சீஷர்கள்தான் அவருடைய சடலத்தைக் களவாடிச் சென்றார்கள் என்று சொல்லும் படியாகவும், அப்படிச் சொன்னால் பணம் தருவதாகவும் சொன்னார்கள்”, என்றான். அவனோ உறங்காமல் இருந்திருக்கிறான், இயேசுவின் சடலம் அங்கு இல்லை என்பதுவும் அவர்கள் சொல்லித்தான் தெரியுமாம். அந்த ஆசாரியர்களின் சொந்த அபிப்பிராயம் என்ன?, என்று சொல்”, என்றதற்கு, “இயேசு ஒரு மனிதரல்ல, மரியாளுடைய மகனும் அல்ல, கன்னிமரியம்மாளின் வயிற்றில், பெத்லகேம் ஊரில் பிறக்கவும் இல்லையாம்”, என்றான்.

யூதருடைய இந்த அனுமானம் உண்மையானால், அவர்கள் சொல்வது சரியாயிருக்கலாம். குயவன் கையில் உள்ள களிமண் எப்படியெல்லாம் செய்யப்படுமோ அது போல அவர் இஷ்டப்படி எல்லாம் நடந்தது. அவருடைய சிநேகிதரும், சத்துருக்களும் அப்படியே நினைக்கிறார்கள். ஏனென்றால், அவர் தண்ணீரைத் திராட்சை ரசமாக்கினார், மரித்தோரை உயிரோடு எழும்பப் பண்ணினார், கடல் கொந்தளிப்பை சாந்தப்படுத்தினார், காற்றை அதட்டினார், கடலிலிருந்து மீனைப் பணத்தோடு வரவழைத்தார். மேற்கூறிய சம்பவங்கள் எல்லாம் அவரால் செய்ய முடிந்தது. இன்னும் இது போல அநேகக் காரியங்கள் அவரால் செய்ய முடியும். யூதர்களும் இதற்குச் சாட்சிகள். இவைகளையெல்லாம் நேரில் பார்த்ததினால், யூதருக்கு அவர் மேல் பகை உண்டாயிற்று. அவர்மேல், அவர் குற்றம் செய்ததாகவோ, அல்லது அவர் சட்டத்தை மீறினதாகவோ நீதி விசாரணை நடத்தப்படவில்லை. மேலும், எந்த ஒரு தனி நபருக்கும் விரோதமாக அவர் ஒன்றும் செய்யவில்லை. ஆயிரமாயிரம் ஜனங்களுக்கும், அவர் நண்பர்களுக்கும், விரோதிகளுக்கும் இவை யாவும் நன்கு தெரியும். Malcus சிலுவையின் அடிவாரத்தில் நின்று கொண்டு, “உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன்”, என்று சொன்ன சாட்சியை நானும் இப்போது தைரியமாகச் சொல்லத் தயாராய் இருக்கிறேன்.

இப்போதும் மகாகனம் பொருந்திய ராஜாவே, நான் என்னால் கூடிய வரையில் பிரயாசப்பட்டு, முழு விபரங்களையும் சேகரித்து, தங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். தாங்களே முழுவதையும் படித்து ஆராய்ந்து, நான் எவ்விதம் இந்தக் காரியத்தில் நடந்து கொண்டேன் என்று தீர்மானியுங்கள்.

Antipater இந்தக் காரியத்தில் என்னைப் பற்றி அநேக கடினமான காரியங்களைச் சொல்லியிருப்பதாய் அறிகிறேன்.

தங்களுடைய உண்மையும், நன்றியுமுள்ள ஊழியன், மிக்க வந்தனங்களுடன் முடிக்கிறேன்.

-பொந்தியு பிலாத்து (Pontius Pilate)


போதகர் அற்புதராஜ்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

HELLO WELCOME---AM CLEMENT HERE.....